Menu Close

வாசிப்பு மாதம் அக்டோபர் 2019 கரவெட்டி | தமிழர் மனை

நிகழ்வின் கருப்பொருள்

சிறுவர்களிற்கு வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவித்தல்

விடயங்கள்

யா / கரவெட்டி சரஸ்வதி மகளிர் வித்தியாலயம் மற்றும் யா / கரவெட்டி ஸ்ரீ நாரத வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தமிழர்மனை உறுப்பினர்களால் வாசிப்பு மாத நிகழ்வானது கொண்டாடப்பட்டது. இங்கு வாசிப்பு தொடர்பில் தமிழர்மனையின் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி. தமிழினி அருமைராசா மற்றும் செல்வி. நிவேதிக்கா குணசேகரன் அவர்களால் சிறிய கலந்துரையாடல் மாணவர்களுக்காக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ் இரு பாடசாலைகளுக்கும் தமிழர்மனையினால் தலா ஜந்து கதைப் புத்தகங்கள் என்ற அடிப்படையில் தமிழர்மனையின் உறுப்பினர் திரு. இராஜரஞ்சன் ஜானுசன் அவர்களால் பாடசாலை அதிபர்களிடம் அன்பளிப்பாக கையளிக்கப்பட்டது.

தமிழர்-மனையின் வாசிப்பு மாதம் 2019

வாசிப்பு தொடர்பான அறிமுகம்

வாசிப்பு என்பது ஒரு பிள்ளை கருவறையில் இருக்கும் போது ஆரம்பிக்கப்பட வேண்டும். அதாவது கருவுற்ற தாய் நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் பிள்ளையினுடைய மூளை விருத்தி சிறப்பாக நடைபெறுகின்றது. எனவே தாயிடம் இருந்து வாசிப்பு பழக்கமானது ஆரம்பிக்கப்படுகின்றது. இதனால் அனைவரும் சிறந்த நூல்களை வாசிப்பதன் வழி அவரது வாழ்க்கை பூரணத்துவம் அடைகின்றது.

இந்த நிகழ்வானது வாசிப்பு பற்றிய விழிப்புணர்வாக அமைவதுடன் சிறுவர்களிடம் உள்ள வாசிப்பு தொடர்பான தடைகள் இங்கு இனங்காணப்பட்டதுடன் உரிய ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதாவது சத்தமாக வாசிப்பதில் தயக்கம், வெட்கம், வாசிப்பதில் அக்கறை குறைவு, எழுத்துக்களை கண்டறிவதில் சிரமம், உச்சரிப்பு சார் பிரச்சினை, தாமதமாக வாசித்தல் போன்ற பிரச்சினைகள் இங்கு பெரும்பாலான சிறுவர்களிடம் இனங்காணப்பட்டன. அவற்றினை நிவர்த்தி செய்யும் முகமாக விளையாட்டுக்களின் வழி தமிழ் எழுத்துக்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் தனித்தனியே இனங்காணலுக்கு வைக்கப்பட்டு அதனூடாக எழுத்துக்களை உச்சரித்தல், சொற்களை உருவாக்குதல், வசனம் அமைத்தல், அதனை வாசித்தல் மற்றும் எழுதுதல் என வாசிப்பதற்கான ஆர்வத்தினை தூண்டியதுடன் வாசிப்பதற்கான களமாகவும் அமைந்தது. அத்துடன் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தமிழர்மனையினால் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன .

இங்குள்ள சிறுவர்களின் கல்வி அடைவுமட்டமானது மிகவும் குறைவாக இருப்பதனை அவர்களின் தேர்ச்சிமட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இங்கு வாசிப்பு தொடர்பான தடைகள் குறைவான கல்வி அடைவுமட்டத்திற்கான ஒரு காரணியாக அமைகின்றது. இத்தகைய சிறுவர்களிடம் வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சியினை மேற்கொண்டு வாசிப்பிற்கான ஒரு சிறிய வழிகாட்டியாக இருந்ததில் தழிழர்மனை பெருமை கொள்கின்றது. இத்தகைய பணியினை மேற்கொள்ள இரு பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி வழங்கியதுடன் நேரத்தினை ஒதுக்கி இத் திட்டம் நிறைவேற பங்காற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்ச்சித்திட்டத்தினை சரிவர நடாத்திய தமிழர்மனையின் உறுப்பினர்களுக்கு இவ் இரு பாடசாலைச் சமூகம் தமது நன்றியினை மனதார தெரிவித்துக் கொண்டது.

தமிழர்மனை ஒருங்கிணைப்பாளர்கள்

செல்வி. நிவேதிக்கா குணசேகரன் செல்வி. தமிழினி அருமைராசா.

தமிழர்-மனையின் வாசிப்பு மாதம் 2019

வாசிப்பின் நோக்கம்

 • மகிழ்ச்சி / பொழுதுபோக்கு மற்றும் ஓய்விற்காக வாசித்தல்
 • தகவல் தேவைக்காக வாசித்தல்
 • அறிவுக்காக வாசித்தல்.

வாசிப்புக்கு உகந்தவை

புத்தகங்கள், சஞ்சிகைகள், நாவல்கள், பத்திரிகைகள், பருவ கால வெளியீடுகள், ஆய்வறிக்கைகள்

வாசிப்பினால் கிடைக்கும் நன்மைகள்

 • விடயங்களை விரைவில் கிரகிப்பதற்கு மற்றும் பதிலளிப்பதற்கு உதவுகின்றது.
 • மொழித்திறன், சொல்வன்மை, சொல்லாட்சி, எழுத்துப் பிழையின்றி எழுதும் ஆற்றல், ஞாபகசக்தி போன்றன விருத்தி அடைகின்றது.
 • புதிய விடயங்களை அவதானிக்கும் திறன் மற்றும் புத்தாக்க உணர்வு அதிகரிக்கின்றது.
 • ஏனையவருடன் தொடர்பாடுத் திறன்.
 • பொது அறிவு வளர்ச்சியடைவதுடன் தன்னம்பிக்கை அதிகரித்து சிறந்த உள விருத்தி ஏற்படுவதுடன் ஆளுமைத்திறனும் ஏற்படுகின்றது.
 • சிறந்த படைப்பாற்றல் உருவாக்கும் ஆற்றல்
 • எமக்கான எதிர்கால இலட்ச்சியப் பாதையை சரியாக அமைக்க உதவுகின்றது.

வாசிப்பு பழக்கத்தினை எவ்வாறு ஊக்குவித்தல்

 • ஒரு நாளைக்கு குறைந்தது 15 – 30 நிமிடங்கள் அமைதியாக இருந்து அனைவரும் வாசிக்கும் சந்தர்ப்பத்தினை பாடசாலை மற்றும் குடும்பம் ஏற்படுத்த வேண்டும்.
 • பிள்ளைகளை வாரத்தில் ஒரு தடவையாவது நூலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
 • பாடசாலைகளில் காலைப் பிரார்த்தனை நேரத்தில் மாணவர்களை சிறிய கதைப் புத்தகங்களை வாசிக்க ஊக்குவிப்பு செய்தல்.
 • பிள்ளைகளின் பிறந்ததின நிகழ்வு மற்றும் நல்ல விசேட நிகழ்வுகளின் போது அன்பளிப்பாக நல்ல நூல்களை வழங்குதல்.
 • வீட்டில் மாலை நேரங்களில் குடும்ப அங்கத்தவர்கள் சேர்ந்து இருக்கும் போது பிள்ளைகளை வாசிக்க விடுவதுடன் அவர்களும் இணைந்து வாசித்தல்.
 • சிறுவர்களுக்கு தனியே பாடப் புத்தகங்களை வாசிக்க வழங்காது அவர்களுக்கு விருப்பமான கதைப் புத்தகங்களை வாசிக்க சுதந்திரம் வழங்குதல்.
Google Photo
Google Photo
Google Photo
Google Photo
Google Photo
Google Photo